2-ம் ஆண்டு நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமான அஞ்சலி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். பின்னர் கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2020-08-07 22:32 GMT
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் கனிமொழி எம்.பி., அவரது கணவர் அரவிந்தன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.ஸ்டாலினின் குரல் பதிவு

கருணாநிதி நினைவிடத்தில் அவரது சாதனை திட்டங்கள் அடங்கிய பதாகைகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் கையில் ஏந்தி நின்று புகழ் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியை நினைவுகூர்ந்து மு.க.ஸ்டாலினின் உருக்கமான குரல் பதிவு, நினைவிடத்தில் ஒலிப்பெருக்கி மூலம் ஒலித்துக்கொண்டிருந்தது. மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கருணாநிதி பேரன்கள் துரை தயாநிதி (மு.க.அழகிரியின் மகன்), அருள்நிதி (மு.க.தமிழரசுவின் மகன்), தி.மு.க. எம்.பி. பி.வில்சன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிவாரண உதவிகள்

கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், கழிவுநீர் அகற்று வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு நிதி உதவியுடன் கூடிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முன்னதாக அவர், அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வைகோ

கருணாநிதி நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் ஜீவன், மாவட்ட பொறுப்பாளர் கழகக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட பலரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சி.ஐ.டி. காலனி

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில், கருணாநிதியின் உருவப்படத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து,தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 1,200 பேருக்கும், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி., சென்னை அடையாரில் உள்ள தனது இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தொ.மு.ச. தலைமை அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்