சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-08-08 00:31 GMT
பெரம்பலூர், 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்ககேற்றவர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அதிகாரி உத்தரவிட்டார். இதனை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யும் உத்தரவை சமூக நலத்துறை ஆணையர் உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் இளங்கீரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சிபிராஜா, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிமடம் வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாலைநேர ஆர்ப்பாட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் சாந்தா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்து முன்னிலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்