கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

Update: 2020-08-08 03:51 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த உபரிநீர் நேற்று முன்தினம் காலை காவிரி ஆற்றின் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு 37 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லில் காவிரிக்கரையோர பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஐந்தருவியை மூழ்கடித்தபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஒகேனக்கல்லில் அருவிகளுக்கு செல்லும் நடைபாதைகள் மூழ்கின. அதன் மேல் சுமார் ½ அடி உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறையினர் 2-வது நாளாக நேற்று அளவீடு செய்தனர்.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அருவிகள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்