இன்று முழு ஊரடங்கு நெல்லையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுவதால் நெல்லையில் நேற்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-08-09 02:07 GMT
நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 7-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

7 முறை ஊரடங்கு அறிவிக்கும்போது ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாதத்தின் 2-வது முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது

இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் கூடுதலாக வாங்கி சென்றனர். பாளையங்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் பொதுமக்கள் போட்டி, போட்டு காய்கறிகளை வாங்கி சென்றனர். ஊரடங்கையொட்டி உழவர் சந்தை இன்று செயல்படாது. நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் செயல்படும் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை டவுன் ரதவீதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. சில நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் எச்சரிக்கை

இன்று முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூட வேண்டும், பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், அவசர தேவையிருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்