டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு குணமடைந்துள்ளனர்

டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2020-08-09 16:42 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் தேவபார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர்நல அலுவலகர் சித்ரசேனா, அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறப்பு விகிதம் 1.64 சதவீதம்

ஆய்வுக்கூட்டத்துக்கு பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் 30 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு சளிமாதிரி (ஆர்.டி.-பி.சி.ஆர்.) பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தினமும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில், 10 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

52 ஆயிரத்து 759 பேர் நேற்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்தனர். இறப்பு விகிதம் 1.64 சதவீதமாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வேலூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகமாக காணப்படுகிறது.

டெல்லிக்கு அடுத்தப்படியாக..

பிளாஸ்மா தானம் செய்ய தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பிளாஸ்மா மையம் அமைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்றுக்கு குணமடைந்த 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் மற்றும் உயர்தர மாத்திரைகள், சிறந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். டெல்லிக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு குணமடைந்துள்ளனர். காய்ச்சல் அறிகுறி காணப்படும் நபர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 129 மையங்களில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டையில் கொரோனா பரிசோதனை மையம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் டெங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது. 12 மாவட்டங்களில் சித்த, ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அதிகம் கட்டணம் வசூலித்த 2 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை

சில மருத்துவமனைகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் காணப்படும் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலி டாக்டர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர், சாய்நாதபுரத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்