நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை அரசியலாக்குவது மராட்டிய அரசுக்கு எதிரான சதி சிவசேனா சொல்கிறது

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை அரசியல் ஆக்குவது மராட்டிய அரசுக்கு எதிரான சதி என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறினார்.

Update: 2020-08-09 18:57 GMT
மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் அந்த கட்சியின் சஞ்சய் ராவுத் எம்.பி. கூறியிருப்பதாவது:-

ஒரு விஷயத்தை அரசியல் ஆக்குவதன் மூலமும், அழுத்தம் கொடுக்கும் தந்திரங்கள் மூலமும் இந்த நாட்டில் எதுவும் நடக்க முடியும். இதனால் சுஷாந்த் சிங் வழக்கின் கதை ஏற்கனவே எழுதப்பட்டது போல தெரிகிறது. திரைமறைவாக என்ன நடந்தாலும் அது மராட்டிய அரசுக்கு எதிரான சதி தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போலீசாருக்கு அவமானம்

இதேபோல சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதை எதிர்த்துள்ள சஞ்சய் ராவுத், ‘‘இதற்கு முன் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரும் கூட சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளனர்’’ என கூறியுள்ளார்.

மும்பை போலீசார் உலகத்தில் சிறந்த விசாரணை முகமை எனவும், சுஷாந்த் சிங் வழக்கில் மத்திய அரசு தலையிடுவது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கை மும்பை போலீசாருக்கு மாற்ற உத்தரவிடகோரி சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுஷாந்த் சிங் வழக்கை பீகார் போலீசார் கையில் எடுத்ததில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் மராட்டியம் சார்பில் ஆஜரான வக்கீல் குற்றம் சாட்டினார். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்