புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை: மாவட்ட கலெக்டர் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-08-10 23:15 GMT
புதுச்சேரி, 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய உள்துறை செயலாளர், தேசிய நிர்வாகக் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் குழு அமைத்து இதனை கண்காணிக்கப்படும்.

தனியார் கோவில்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைப்பது, சிலைகளை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து இருப்பதால் கோவில்களில் பிரசாதம் வழங்கவும் கூடாது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கலாசார நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. இவற்றுக்கு பொதுப்பணித்துறை, நகராட்சிகள், காவல்துறை, மாஜிஸ்திரேட்டுகள் எந்த ஒரு அனுமதியும் வழங்கக் கூடாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்