தடையின்றி குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தடையின்றி குடிநீர் வழங்க கோரி திருவோணத்தில் காலிக்குடங்களுடன் மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-10 22:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தோப்புவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாங்கொல்லைபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டியுடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இந்த ஆழ்குழாய் கிணறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அதற்கு பதிலாக சமீபத்தில் தொடர்ந்து இருமுறை புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனாலும் இதன் பணிகள் தரமாக செய்யப்படாத காரணத்தால் புதிய ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடிநீருக்காக சிரமப்படுவதாக கூறி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்தநிலையில் வண்ணாங்கொல்லைப்பட்டியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திருவோணம் ஒன்றிய அலுவலகத்தின் முகப்பில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்