வேலைவாய்ப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் மனு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா தியேட்டர் ஊழியர்கள் வேலை வாய்ப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2020-08-11 00:36 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுவாக போடவேண்டும். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் கலெக்டர் ஷில்பா, மக்களிடம் காணொலி காட்சி மூலம் குறைகளை கேட்டு வருகிறார். இதேபோல் நேற்று கலெக்டர் ஷில்பா, பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் குறைகளை கேட்டார்.

இந்தநிலையில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் மாரியப்பன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கொரோனா ஊரடங்கால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காணவேண்டும் என்று கூறி அந்த பெட்டியில் மனு போட்டனர்.

அந்த மனுவில், “ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு அரசு பணி ஒப்பந்த அடிப்படையில் தரவேண்டும். உதவித்தொகை வழங்கவேண்டும். நலவாரியம் மூலம் சலுகைகள் வழங்கவேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் காஜா இஸ்மாயில் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில், “மேலப்பாளையம் ஆமீம்புரத்தில் தோல் பதமிடுவதால் குடிநீர் மாசுபடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தோல் பதமிடும் மண்டியை மூடவேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆன்லைன் கல்வி முறையை ரத்து செய்யவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்டு சென்றனர்.

பணகுடி பகுதியில் விவசாயத்திற்கு தேவையான மண் எடுப்பதற்கு என்று அரசிடம் இலவச அனுமதி பெற்றுவிட்டு செங்கல் சூளைக்கு மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உரிமம் இல்லாமல் மணல் கடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணகுடி பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்