கொரோனா பரவல் 2-வது அலை ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை பிரதமர் நடத்திய ஆலோசனையில் உத்தவ் தாக்கரே பேச்சு

மராட்டியத்தில் கொரோனா பரவல் 2-வது அலை ஏற்படாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் நடத்திய ஆலோசனையில் உத்தவ் தாக்கரே பேசினார்.

Update: 2020-08-11 21:15 GMT
மும்பை, 

கொரோனா அதிகம் பாதித்த மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் மராட்டிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரு கொரோனா பாதிப்பை கூட அரசு மறைக்கவில்லை. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா ஆஸ்பத்திரிகளை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

2-வது அலை

மராட்டியத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தாராவி, ஒர்லியில் தொற்று பாதிப்பை வெகுவாக குறைத்து உள்ளோம். ஆனால் தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை. மராட்டியத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். இதற்கான தடுப்பு பணியில் கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.

கொரோனா தொற்று பிரச்சினையில் மாணவர்கள் நலன் கருதி தொழில் சாராத படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டாம். மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

மேலும் செய்திகள்