சமூக வலைத்தளங்களில் பெங்களூரு வன்முறை தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு

பெங்களூரு வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-08-12 22:17 GMT
பெங்களூரு, 

சிறுபான்மையினர் சமுதாயம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் முகநூலில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்தார். இதனால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகத்திற்கும், அவரது உறவினரான நவீனின் வீட்டிற்கும் தீ வைத்தார்கள். மேலும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.

அதோடு நிற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். மேலும் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த வாகனங்களையும் புரட்டி போட்டு தீ வைத்து எரித்தனர். காவல் பைரசந்திரா பகுதியிலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கடைகள், கண்காணிப்பு கேமராக்கள் மீதும் வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

பரபரப்பு

மேலும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.எந்திரமும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. வன்முறையாளர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் ஆத்திரத்தில் வன்முறையாளர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் போலீஸ்காரர்கள் 60 பேர் வரை காயம் அடைந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் 3 இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 150 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அலுவலகம், போலீஸ் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், காவல் பைரசந்திரா பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பான வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் செய்திகள்