புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2020-08-12 23:40 GMT
புதுச்சேரி, 

புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை (வயது 56). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் நேற்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியானதில் ஏழுமலைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர்

ஊசுடு தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு ஏழுமலை வெற்றிபெற்றார். அதன்பின் 2001 தேர்தலில் கண்ணன் தலைமையிலான புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ்-புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2004 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பின் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஊசுடு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாசிக் நிறுவனத்தின் தலைவராகவும் ஏழுமலை பதவி வகித்து உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

குடும்பம்

வில்லியனூர் அருகே உள்ள பங்கூரில் தனது குடும்பத்துடன் ஏழுமலை வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கவிப்பிரியா என்ற மனைவியும் 3 மகன் களும் உள்ளனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

புதுவையில் ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ.வும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பாலன் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஏழுமலையும் பலியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்