குற்றாலத்தில் காட்டு யானை மிதித்து வனத்துறை ஊழியர் பலி

குற்றாலத்தில் காட்டு யானை மிதித்து வனத்துறை ஊழியர் இறந்தார்.

Update: 2020-08-13 01:08 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதி அருகில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிந்தது. மேலும் அங்குள்ள தோட்டத்துக்குள் புகுந்து பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வனத்துறையினர் நேற்று அந்த காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி மாலையில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து, அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியவாறு சென்றனர்.

வேட்டை தடுப்பு காவலர் பலி

குற்றாலம்-தெற்குமலை எஸ்டேட் செல்லும் வழியில் காட்டு பகுதியில் சென்றபோது, அந்த யானை திடீரென்று வனப்பகுதிக்கு செல்லாமல், திரும்பி வனத்துறையினரை விரட்டியது. இதனால் வனத்துறை ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினர்.

அப்போது வேட்டை தடுப்பு காவலரான முத்துராஜை (வயது 59) அந்த யானை திடீரென்று துதிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னரும் அந்த யானை, அங்கிருந்து செல்லாததால், முத்துராஜின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து யானையை வனப்பகுதியில் விரட்டவும், முத்துராஜின் உடலை மீட்கவும் வனத்துறையினர் முயன்றனர்.

இறந்த முத்துராஜிக்கு சொந்த ஊர், குற்றாலம் அருகே நன்னகரம் ஆகும். குற்றாலத்தில் யானை மிதித்து வனத்துறை ஊழியர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்