மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன 2 பேர் உடல் கருகி சாவு

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இதில் 2 பேர் உடல் கருகி இறந்தனர்.

Update: 2020-08-13 20:47 GMT
பால்கர், 

மும்பை புறநகர் பகுதியான போரிவிலியில் இருந்து பொய்சர் நோக்கி மராட்டிய அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று அத்தியாவசிய பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

இந்தநிலையில் பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் மனோர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தேகலே கிராமம் அருகே பஸ் பிற்பகல் 3.30 மணியளவில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புற சாலையில் பாய்ந்தது. அப்போது, அந்த சாலையில் மும்பை நோக்கி ஆம்னி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.

பயங்கர மோதல்

இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேனும், பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் ஆம்னி வேனில் இருந்த சி.என்.ஜி. கியாஸ் டேங்க் வெடித்ததில் பஸ்சும், ஆம்னி வேனும் தீப்பிடித்தன. இரு வாகனங்களும் கொழுந்து விட்டு எரிந்தன.

இந்த துயர சம்பவத்தில், ஆம்னி வேனில் வந்த பயந்தரை சேர்ந்த ஜித்தேஷ், பர்பாஜ் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புபடை வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் பஸ் டிரைவர் நிலேஷ் தானாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்