செல்போன் எண்ணுடன் கல்லூரி மாணவி பெயரில் ஆபாச முகநூல் கணக்கு என்ஜினீயர் கைது

தன்னுடன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக ஆபாச முகநூல் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-08-13 23:38 GMT
திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடம் காஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன்(வயது 24). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதல் விவகாரம் அறிந்த மாணவியின் பெற்றோர், இருவரையும் கண்டித்தனர். அதன்பிறகு மகாதேவனை சந்திப்பதை கல்லூரி மாணவி தவிர்த்து வந்தார். தன்னுடன் மீண்டும் பேசும்படி மகாதேவன் பலமுறை வலியுறுத்தியும் கல்லூரி மாணவி மறுத்துவிட்டார்.

ஆபாச முகநூல்

இதனால் ஆத்திரம் அடைந்த மகாதேவன், அந்த கல்லூரி மாணவியின் பெயரில் முகநூலில் போலியான கணக்கு தொடங்கினார். அதில் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றியதுடன், அவரது செல்போன் எண்ணையும் பதிவு செய்தார்.

இதனால் மாணவிக்கு பல்வேறு நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மகாதேவன், கல்லூரி மாணவி பெயரில் போலியாக ஆபாச முகநூல் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியது உறுதியானது. இதையடுத்து மகாதேவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்