மாதம் 60 ரூபாய் செலுத்தியவருக்கு ரூ.21 ஆயிரத்துக்கு ‘பில்’ கணக்கீட்டு குளறுபடியால் எகிறிய மின்கட்டணம்

மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் மாதம் 60 ரூபாய்க்குள் மின்கட்டணம் செலுத்தியவருக்கு 21 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதை கண்டித்து அரியாங்குப்பம் மின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2020-08-14 23:04 GMT
அரியாங்குப்பம், 

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மின் கணக்கீடும் பணி நிறுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் முந்தைய 3 மாத சராசரி கட்டணத்தை கணக்கிட்டு மின்கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஊரடங்கு தளர்வுக்குப் பின் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் மின் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் முந்தைய மாத பில்களை காட்டிலும் அதிகமாக மின்கட்டண தொகை வந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ரூ.21 ஆயிரம் மின் கட்டணம்

வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீட்டில் ஊரடங்குக்கு முன்பு வரை மாதந்தோறும் ரூ.60-க்கு குறைவாகவே மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த மாதம் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் அவருக்கு கடந்த 3 மாதத்திற்கு மொத்தம் ரூ.21 ஆயிரத்து 513 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் பில் எகிறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அரியாங்குப்பத்தில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து இதுபற்றி கேட்டனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் பதில் அளிக்காததை கண்டித்து மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கணக்கீட்டில் குளறுபடி

இதுபற்றி தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி தலைவர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மின்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மின் கணக்கீட்டில் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்தது.

அதாவது ரூ.21 ஆயிரம் மின்கட்டணம் வந்த மீனவரின் வீட்டில் 1,700 யூனிட் என்பதற்கு பதிலாக தவறாக 7,700 யூனிட் என்று பதிவு செய்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது மின் கட்டண பில் தொகை சரி செய்யப்பட்டது. இதுபோல் மற்ற நுகர்வோரின் கணக்கீடும் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்