காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-08-15 00:16 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில். நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடுகளிலேயே கொண்டாட...

கொரோனா தொற்றை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ, அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே, விநாயகர் சதுர்்த்தி விழாவை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாடவும், விழாவை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிய கோவில்களில்

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வாறு வழிபாட்டு தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்