தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் 4 ஆயிரத்து 652 பேருக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்

தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் பல்வேறு துறை பணியாளர்கள் 4 ஆயிரத்து 652 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2020-08-15 22:15 GMT
தேனி,

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேசியகொடியை ஏற்றி வைத்தார். தேசியகொடிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை அவர்கள் பறக்கவிட்டனர். விழாவில், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்டத்தில் போலீஸ் துறையை சேர்ந்த 2 ஆயிரத்து 700 பேருக்கும், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 1,952 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 652 பேருக்கு சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டது. இதில் சுமார் 50 பேருக்கு விழாவில் கலெக்டர் வழங்கினார்.

வழக்கமாக சுதந்திர தின விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. முன்னாள் படைவீரர்களுக்கு, விழா அரங்கில் கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தியாகிகள் விழாவுக்கு அழைத்து வரப்படவில்லை. அதற்கு பதிலாக வீடு தேடி சென்று தியாகிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் கவுரவித்தனர்.

விழாவில், கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். போலீசாரும் சமூக இடைவெளியுடன் அணிவகுத்து நின்றனர். விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) தாக்ரே சுபம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தேசியகொடி ஏற்றி வைத்து போலீசாருக்கு இனிப்பு வழங்கினார். அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா தலைமை தாங்கினார். அல்லிநகரம் கிராமகமிட்டி செயலாளர் தாமோதரன் தேசியகொடி ஏற்றினார். பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் வீரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் தேனியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவில் நகர தலைவர் விஜயகுமார் தேசியகொடி ஏற்றினார். மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தேனி மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் இளைஞர் முன்னணி சார்பில் பெரியகுளத்தில் காந்தி சிலைக்கும், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்