கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய 40 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்கள்

சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய 40 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்களை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2020-08-26 00:18 GMT
சேலம், 

சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நலத்திட்ட சிறப்பு வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை மருத்துவ குழு வாகனங்கள், சேலம் மாநகராட்சியின் சுகாதார வாகனங்கள் என மொத்தம் 40 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்களை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசும் போது கூறியதாவது:-

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மக்களுக்கு நேரடி மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சளித்தடவல் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக 40 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்கள்

மாநகராட்சியின் 60 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த 40 நடமாடும் மருத்துவக் குழுக்களின் வாகனங்கள் மூலம் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த மருத்துவ குழுவின் மூலம் நாள் ஒன்றிற்கு தலா 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ குழு வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர், சுகாதார செவிலியர் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 5 நபர்களுக்கு குறையாமல் இருப்பார்கள். மொத்தம் உள்ள நடமாடும் 40 சிறப்பு மருத்துவ குழு வாகனத்தில் 200-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்கேயே முகாம் அமைத்து காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்கின்றன.

முககவசம்

சிறப்பு முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்குவதற்காக, அனைத்து நடமாடும் சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களுக்கும் முககவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுகின்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களில் சேகரிக்கப்படும் மாதிரிகளை உடனுக்குடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் இப்பரிசோதனைகள் குறித்த முடிவுகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, நோய்தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும்.

நாள்தோறும் 3000 முதல் 4000 வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளவதற்கான அனைத்து வசதிகளும் சேலம் அரசு ஆஸ்பத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினர்.

வைட்டமின் டானிக்

முன்னதாக, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக் வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்