இறகுப்பந்து பயிற்சியாளரை தாக்கி நகை-பணம் பறிப்பு: பெண் வக்கீல் உள்பட 5 பேர் சிக்கினர்

இறகுப்பந்து பயிற்சியாளரை தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில் பெண் வக்கீல், அவரது கணவர் உள்பட 5 பேர் சிக்கினர்.

Update: 2020-08-26 02:04 GMT
மதுரை, 

மதுரை அனுப்பானடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 25). இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விளையாட்டு மையத்தில் இறகுப்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் நோக்கி சென்றார்.

அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று பாரதிராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் மோதிரம், 18 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்த மணிபர்சை பறித்து சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து பாரதிராஜா அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்குமாறு போலீஸ் துணை கமிஷனர் பழனிகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, போலீஸ்காரர்கள் தமிழ், திருவாசகம், வைரவேல், அலியாக்கனி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நகை, பணத்தை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனக்கன்குளம், பர்மா காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒத்தக்கண்ணு பாண்டிராஜன்(35) என்பது தெரியவந்தது.

5 பேர் சிக்கினர்

அவரை பிடித்து விசாரித்தபோது வைக்கம் பெரியார் நகர் அப்பாஸ்(27), ஊர்மெச்சிக்குளம் காளிமுத்து(25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் நகை பறிப்பு, செல்போன் பறிப்பு ஈடுபட்டதாகவும், அதனை கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து டிரைவர் ஸ்டீபவன் வர்கீஸ்(38), அவரது மனைவி வக்கீல் கோட்டை ஈஸ்வரி (29) ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் அவனியாபுரம் பகுதியில் நடந்த 10-ம் மேற்பட்ட நகை பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா பாராட்டினார்.

மேலும் செய்திகள்