கூடலூர் அருகே பரிதாபம்: பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் பலி

கூடலூர் அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற 2 சகோதரர்களும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

Update: 2020-08-26 02:18 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா (வயது 22). நேற்று மாலை 3 மணி அளவில் சுகன்யா விறகு சேகரிக்க வீட்டின் அருகே 300 மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது வனத்தில் புதர்கள் மூடியவாறு இருந்த 70 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையறிந்த சுகன்யாவின் சகோதரர் தமிழழகன் (24) மற்றும் அவரது சித்தப்பா மகன் முரளி (26) ஆகியோர் அந்த கிணற்றை நோக்கி ஓடினர். பின்னர் சுகன்யாவை மீட்பதற்காக ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்குள் குதித்தனர்.

3 பேர் பலி

ஆனால் கிணற்றுக்குள் தண்ணீர் மற்றும் சேறு நிறைந்து காணப்பட்டது. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதை அறிந்த கிராம மக்கள் தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அமீர் அகமது, ஜெய் சிங் உள்பட போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு துறையினர் அந்த கிணற்றுக்குள் இறங்கி அவர்கள் 3 பேரையும் தேடினார்கள். அப்போது கிணற்றுக்குள் சேறு-சகதியில் சிக்கி அவர்கள் 3பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் பல்வேறு போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.30 மணிக்கு இளம்பெண் சுகன்யா மற்றும் முரளி, தமிழழகன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர்

பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின்பேரில் தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் உயிரிழந்த சம்பவம் தேவாலா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்