சங்கொள்ளி ராயண்ணா சிலை விவகாரம் பெலகாவியில் போராட்டம் வெடித்தது; போலீஸ் தடியடி-பதற்றம் இரு தரப்பினரும் அமைதி காக்க எடியூரப்பா வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரர் சங்கெள்ளி ராயண்ணாவுக்கு சிலை வைத்ததால் பெலகாவியில் போராட்டம் வெடித்தது. இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் அமைதி காக்கும்படி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2020-08-28 23:54 GMT
பெங்களூரு,

கர்நாடக-மராட்டிய எல்லையில் அமைந்து உள்ளது பெலகாவி மாவட்டம்.
பெலகாவி தங்களுக்கு உரியது என்று மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பெலகாவியை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் கர்நாடக அரசு கூறி வருகிறது. மேலும் பெலகாவி கர்நாடகத்திற்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கர்நாடக அரசு பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடத்தி வருகிறது.

பெலகாவி கர்நாடகத்தில் உள்ளது என்றாலும் அந்த மாவட்டத்தில் மராட்டியர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கேரியில் கித்தூர் அருகே ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டது. இதற்கு மராட்டியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது மராட்டியர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் கோஷம் எழுப்பி இருந்தனர். இதனால் கன்னடர்கள்-மராட்டியர்கள் இடையே மோதல் உண்டானது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்து இருந்தனர்.

இந்த நிலையில் உக்கேரியில் அகற்றப்பட்ட சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதி இருந்தார். மேலும் சிவாஜி சிலையை அகற்றியதற்கு பெலகாவி மாவட்டம் கானாப்புரா தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அஞ்சலி நிம்பால்கரும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு உக்கேரியில் சிவாஜி சிலையை நிறுவ கோரி சிவசேனா தொண்டர்கள், கர்நாடகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தார்கள்.

இந்த நிலையில் பெலகாவி அருகே பீரனவாடி பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சங்கொள்ளி ராயண்ணா சிலையை நிறுவ வேண்டும் என்று சங்கொள்ளி ராயண்ணா அமைப்பினர், கன்னட அமைப்பினர் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பீரனவாடியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை நிறுவ வேண்டும் என்று சங்கொள்ளி ராயண்ணா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டும் சங்கொள்ளி ராயண்ணா அமைப்பினர் போராட்டம் நடத்தி இருந்தனர்.

இதுபற்றி அறிந்த கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரியும், பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமேஷ் ஜார்கிகோளி அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெலகாவி-கானாப்பூர் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதால் தற்போது பீரனவாடியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை வைக்க முடியாது. வருகிற 30-ந் தேதி(நாளை) வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். பெலகாவிக்கு வரும் கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பாவிடம் பேசி சிலையை வைக்க நடவடிக்கை எடுப்பதாக கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று இருந்தனர். இதற்கிடையே பீரனவாடியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை வைக்க அப்பகுதியில் வசித்து வரும் மராட்டியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பீரனவாடி கிராமத்தில் 5 அடி உயர சங்கொள்ளி ராயண்ணா சிலையை, அவரது ஆதரவாளர்கள் நிறுவினர். நேற்று காலை பீரனவாடி கிராமத்தில் வசித்து வரும் மராட்டியர்கள், சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சங்கொள்ளி ராயண்ணா சிலை முன்பு திரண்ட ஒரு பிரிவினர் சிலையை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த கோஷ்டி மோதல் பற்றி அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் அங்கு சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது ஒருதரப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தினர் மீது செருப்புகள் வந்து விழுந்தன. இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். ஆனாலும் போலீசார் விரட்டி விரட்டி தடியடி நடத்தினர். இதன்காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பெலகாவி மாநகர போலீஸ் கமிஷனர் தியாகராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போலீஸ் கமிஷனர் தியாகராஜன், இருதரப்பு தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பெலகாவி துணை போலீஸ் கமிஷனர் சீமா லத்கரும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஏதாவது பிரச்சினை ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று பெலகாவி மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்தில் வைத்து சிவசேனா மற்றும் மராட்டிய ஏகிகிரண் சமிதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் சங்கொள்ளி ராயண்ணா சிலையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க கலெக்டர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கூட்டத்தில் இருந்து சிவசேனா, மராட்டிய ஏகிகிரண் சமிதியினர் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெலகாவி, பீரனவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“பீரனவாடியில் சங்கொள்ளி ராயண்ணா சிலை அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து பெலகாவி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பிரச்சினைக்கு உடனடியாக சுமூக தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். நிலைமையை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு சில அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். இந்த விவகாரத்தில் கன்னடர்கள், மராட்டியர்கள் என்ற வேறுபாடு இருக்க கூடாது.

பீரனவாடியில் தற்போது அமைதி திரும்பி உள்ளது. பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சினையை சரிசெய்ய மாவட்ட கலெக்டர் கூடுதல் கவனம் செலுத்தி, பணியாற்றி வருகிறார். பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுக்கும். பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்