தக்கலை அருகே, அண்ணியை உயிரோடு எரித்துக் கொன்ற கொழுந்தனார் கைது - 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்-பரபரப்பு வாக்குமூலம்

தக்கலை அருகே அண்ணியை உயிரோடு எரித்துக் கொன்ற கொழுந்தனாரை 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-29 06:45 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி சிவகலா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்தார். இதனால் சிவகலா அந்த பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

சுரேஷ்குமாரின் தம்பி ஸ்ரீகண்டனுக்கு (43) திருமணமாகவில்லை. இதனால் அவர், சிவகலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் சிவகலாவின் நடத்தையில் ஸ்ரீகண்டனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 18-6-17 அன்று சிவகலா தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய தாயார் சரஸ்வதி, சகோதரர் கிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது, ஸ்ரீகண்டன் மண்எண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு சிவகலாவின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து விட்டு, தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தீயின் கோரப்பிடியில் சிக்கி அலறி துடித்த அவரை தாயார் மற்றும் சகோதரர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரிடம் போலீசார் விசாரித்த போது, ஸ்ரீகண்டன் என் மீது மண்எண்ெ-ணையை ஊற்றி தீ வைத்தார் என்று கூறினார். பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சிவகலா பரிதாபமாக இறந்தார். பின்னர் ஸ்ரீமணிகண்டன் தலைமறைவாகி விட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீகண்டன், நண்பர்களுடன் பேசுவதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரின் நண்பர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, ஸ்ரீகண்டன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோளஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, 3 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகண்டனை கைது செய்து, தக்கலைக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது அண்ணியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் அண்ணன் சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதனால் என் அண்ணி வீட்டிலேயே நான் சாப்பிட்டு வந்தேன். இதனால் அவர் மீது அன்புடன் இருந்து வந்தேன். அவரும் நன்றாக பேசி வந்தார். இந்த நிலையில் அவர் 100 நாள் வேலைக்கு செல்ல தொடங்கினார். அதன்பிறகு என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவருக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கலாம் என்று கருதினேன். இதனால் என் அண்ணி மீது வெறுப்பு ஏற்பட்டு, அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மண்எண்ணெய் கேனை எடுத்து சென்று அவர் மீது ஊற்றி தீவைத்தேன். அதன்பிறகு நான் கேரளா சென்று விட்டேன். அங்கு கொத்தனார் வேலை செய்து, வாழ்ந்து வந்தேன். 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த என்னை போலீசார் தற்போது கைது செய்து விட்டனர்.

இவ்வாறு ஸ்ரீகண்டன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்