வசந்தகுமார் எம்.பி.யின் உடல் நள்ளிரவில் சொந்த ஊருக்கு வந்தது

வசந்தகுமார் எம்.பி.யின் உடல் நள்ளிரவில் சொந்த ஊருக்கு வந்தது.

Update: 2020-08-29 23:46 GMT
தென்தாமரைகுளம்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் உடல் தியாகராயநகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அகஸ்தீஸ்வரம் வந்தது

நேற்று அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்துக்கு காலை 11.45 மணிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு ஆம்புலன்சில் இருந்தபடியே அவர் உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து வசந்தகுமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தது.

வசந்தகுமார் எம்.பி.யின் வீட்டின் முன்பு உடல் வைக்கப்பட்டது. அந்த உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

வசந்தகுமார் உடல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 8 மணிக்கு அவரது பெற்றோர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

வசந்தகுமார் உடலுக்கு கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதனால் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வசந்தகுமாரின் சொந்த வீடு மற்றும் உடல்அடக்கம் செய்யும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்