இன்று முழு ஊரடங்கு: மீன் கடை, உழவர் சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் மீன்கடை, உழவர் சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

Update: 2020-08-30 00:54 GMT
கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள் மட்டுமே திறந்து இருக்கும். டீக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை உள்பட அனைத்து கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.

அத்தியாவசியமான தேவை தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களை கண்டறிய மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அலைமோதிய கூட்டம்

இன்று முழு ஊரடங்கையொட்டி ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, டவுன்ஹால், மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்தபடி நின்று காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர்.

இது போல் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் நின்று மீன்கள் மற்றும் இறைச்சி வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்