திருச்சி விமானநிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு

திருச்சி விமான நிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-30 23:21 GMT
திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நேற்று காலை பொதுப்பணித்துறையை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் காரில் வேகமாக சென்று கொண்டு இருந்தார். விமானநிலையம் அருகே அண்ணா கோளரங்கம் எதிரே சென்றபோது, அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமுள்ள அடிகுழாயை இடித்து தள்ளி விட்டு குடிசைக்குள் பாய்ந்தது.

இதில் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து சாமான்கள் சேதம் அடைந்தன. இதை கண்டு அங்கு நின்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக குடிசை வீட்டில் ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கண் அயர்ந்ததால் விபத்து

சம்பவ இடத்துக்கு தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் விபத்து நடந்தது எப்படி?. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது ஏன்? என்று விசாரணை நடத்தினார்கள். அதில், காரை ஓட்டி வந்த அரசு அதிகாரி கண் அயர்ந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சேதம் அடைந்த குடிசை வீட்டிற்கு உரிய இழப்பீட்டை தருவதாக அந்த அதிகாரி கூறியதை அடுத்து, போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்