கோவை அருகே வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம்

கோவை அருகே உள்ள வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2020-08-31 01:52 GMT
கோவை,

கோவை அருகே உள்ள போளுவாம்பட்டி வனப்பகுதியில், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கேமராவில் பதிவான புகைப்படங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் ஆண் புலி, சிறுத்தைப்புலி, கரடி நடமாட்டம் உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முதன்முறை

போளுவாம்பட்டி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் முதன்முறையாக பதிவாகி உள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் இந்த புலி உள்ளது. புலிகள் வாழ்வதற்கான சூழ்நிலை இந்த வனப்பகுதியில் உள்ளது. மேலும் புலி வேட்டையாடுவதற்கான புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகளும் இருப்பதால் குறைந்தபட்சம் 4 புலிகளாவது இங்கு இருக்க வாய்ப்பு உள்ளது.

இதுதவிர சிறுத்தைப்புலி மற்றும் கரடி, காட்டெருமை, காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளன.

வனப்பகுதியில் வேட்டையாடுபவர்களை பிடிக்கவும், அவுட்டுகாய் என்று அழைக்கப்படும் நாட்டுவெடிகுண்டுகளை வைத்து காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்