கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் குணமடைந்தார் - நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு

கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் குணமடைந்தார். அவர் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-08-31 21:58 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கடந்த 21-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 சதவீத தொற்று இருந்ததால், கலெக்டர் முகாம் அலுவலகத்திலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே கலெக்டர் சி.கதிரவன் அலுவலக பணிகளை செய்து வந்தார். செல்போன் மூலமாகவும், காணொலி காட்சி மூலமாகவும் பணியை தொடர்ந்தார்.

இதற்கிடையே அவருக்கு கொரோனா மறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்ததால், அவர் கடந்த 28-ந் தேதியில் இருந்து வெளியில் செல்லலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இருந்தாலும், கலெக்டர் சி.கதிரவன் வெளிநிகழ்ச்சிகளில் உடனடியாக பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

அப்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

தமிழக அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுதல், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் ஆர்.மணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்