கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் சாக முடிவு

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் சாக முடிவு செய்ததாக போலீசாரிடம் அவர் கூறினார்.

Update: 2020-09-01 22:15 GMT
கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மெயின் கேட் அருகே உள்ள நுழைவு வாயிலில் போலீசார் நின்று கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லும் அனைவரையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் பின்புறம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி தீக்குளிக்க முடியாமல் தடுத்தனர்.

பின்னர் அவரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் கோபிநாத் (வயது 31) என்பதும், விருதுநகர் மாவட்டம் குச்சம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், தற்போது கரூர் வையாபுரி நகர் முதல் கிராசில் தங்கியிருந்து பஸ் பாடி கட்டும் வேலைக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாகவும் அதற்கு வட்டி செலுத்தி வந்த நிலையில் தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் சரியாக வேலை இல்லாததால் சிரமப்பட்டு வருவதாகவும், நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணத்தை கட்டச்சொல்லி மிரட்டி வருவதாலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் சாக முடிவு செய்ததாகவும் கூறினார். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவர் தீக் குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்