தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.

Update: 2020-09-02 00:28 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கூடும் அனைத்து நிறுவனங்கள், பொது இடங்கள் மூடப்பட்டன. அதன்படி நூலகங்களும் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து பல்வேறு கட்டமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது தமிழக அரசு நூலகங்களை திறக்க அனுமதி அளித்து உள்ளது.

நூலகங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதி நேர நூலகங்கள் உள்பட 131 நூலகங்கள் உள்ளன. இதில் பகுதி நேர நூலகங்கள் தவிர 111 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில் நூல் இரவல் பிரிவு, சொந்த நூல்கள் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு ஆகிய 3 பிரிவுகள் மட்டும் இயங்கின. நாளிதழ்கள், பருவ இதழ்கள் பிரிவு செயல்படவில்லை. முழுநேர நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையும், கிளை நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஊரக பகுதிகளில் உள்ள நூலகங்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் திறக்கப்பட்டன. அதன்பிறகு நூலகங்கள் மூடப்பட்டன.

நூலகங்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் நூலகத்துக்குள் வாசகர்கள் அனுமதிக்கப்பட்டனர். நூலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதே போன்று அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்