மாவட்டத்துக்குள் பஸ்களை இயக்க அனுமதி: பயணிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணம்

மாவட்டத்துக்குள் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பஸ்களில் பயணம் செய்தனர்.

Update: 2020-09-02 05:30 GMT
திண்டுக்கல்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அவ்வப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாவட்டங்களுக்குள் அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்குள் நேற்று காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் ஓடின. அரசு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 400 பஸ்களில் 89 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 46 பஸ்கள் திண்டுக்கல்லை சுற்றியுள்ள நகரங்களுக்கும், 5 பஸ்கள் மலைக்கிராமங்களுக்கும், 38 பஸ்கள் புறநகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன.

இந்த பஸ்கள் மதுரை சாலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் வரையும், நத்தம் சாலையில் நத்தம் வரையும், தேனி சாலையில் வத்தலக்குண்டு வரையிலும், பழனி சாலையில் பழனி, சாமிநாதபுரம் வரையும், தாராபுரம் சாலையில் கள்ளிமந்தையம் வரையும், கரூர் சாலையில் வேடசந்தூர் வரையும், திருச்சி சாலையில் அய்யலூர் வரையும் சென்று வந்தன. இதேபோல் ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டுவில் இருந்து ஒரு பஸ் இயக்கப்பட்டது. வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடி, பட்டிவீரன்பட்டி வழியாக சித்தரேவு வரையும், திண்டுக்கல்லில் இருந்து ஆடலூர், பன்றிமலை, சிறுமலைக்கும், கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலை, வில்பட்டி, கிளாவரை பகுதிக்கும் தேவைக்கேற்ப பஸ்கள் இயக் கப்பட்டன. அவற்றில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணம் செய்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசனிடம் கேட்டபோது, அரசு உத்தரவுப்படி இன்று முதல் திண்டுக்கல் மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்படுகிறது. முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக அவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வழங்கப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பஸ்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். பயணிகள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்களை இயக்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார். பின்னர் பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கியும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப அளவை சோதனை செய்தும் பயணிகளை பஸ்களில் பயணம் செய்ய அனுமதித்தார்.

மேலும் செய்திகள்