உடுமலை அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை-மகன் பலி

உடுமலை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை -மகன் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-09-02 06:00 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பனூத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). இவர் கறவை மாடுகள் வளர்த்து வருவதுடன், பால் விற்பனையும் செய்து வந்தார். மேலும் ஆர்டரின் பேரில் உணவு தயாரித்து கொடுக்கும் வேலையும் பார்த்து வந்தார். இவருடைய மகன் தர்னேஷ் (6).

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பால் ஊற்றுவதற்காக கார்த்தி உடுமலை - ஆனைமலை சாலையில் பாப்பனூத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது மகன் தர்னேசையும் உடன் அழைத்து சென்றார்.

இவருடைய மோட்டார் சைக்கிள் மங்களாபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியும், அவரது மகன் தர்னேசும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தி மற்றும் தர்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையும் மகனும் சாலை விபத்தில் இறந்த சம்பவம் பாப்பனூத்து பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்