திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2020-09-03 00:36 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் 3 வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அங்குள்ள நகரமைப்பு அதிகாரி அலுவலக அறைக்குள் நுழைந்ததும், நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து அறை கதவுகளும் மூடப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒவ்வொரு அதிகாரிகளின் அறைகளிலும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகராட்சி கமிஷனரின் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் சோதனையில் ஈடுபட்டனர்.

முக்கிய ஆவணங்கள் சிக்கின

இதற்கிடையே வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்த அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களையும் அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்களின் முகவரி மற்றும் செல்போன் நம்பர்களை வாங்கி வைத்து கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. திருவேற்காடு நகராட்சியில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி அளிக்க நகரமைப்பு பிரிவில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, இந்த சோதனையை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

மேலும் செய்திகள்