திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ்

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-09-03 01:42 GMT
திருச்செந்தூர்,

நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகம், பராமரிப்பு, சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களில் சிறப்பாக செயல்படும் ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூலம் தேசிய தர உறுதி சான்று வழங்கப்பட்டு வருகிறது.

2019-2020-ம் ஆண்டில் தமிழகத்தில் 13 அரசு ஆஸ்பத்திரி தேசிய தர உறுதி சான்றுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியும் தேர்வாகியுள்ளது. இதனையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவியிடம் சான்றிதழையும், ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ ஊரக நலப்பணி இயக்கக இயக்குனர் குருநாதன், தேசிய சுகாதார குழுமம் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கலெக்டரிடம் வாழ்த்து

தேசிய தர உறுதி சான்று பெற்றதை தொடர்ந்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி மற்றும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்று கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகள்