தூத்துக்குடியில் பயங்கரம்: தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை நண்பர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-09-03 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் நமச்சிவாயராஜ் (வயது 55). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவில் மதுஅருந்தி விட்டு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு நமச்சிவாயராஜின் நண்பரான தூத்துக்குடி மணிநகரை சேர்ந்த சந்திரபோஸ் (44) வந்தார். அவரும் குடிபோதையில் வந்தாக தெரிகிறது. 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் சந்திரபோஸ் செல்போனில் 2 பேரும் சேர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சந்திரபோஸ், கீழே கிடந்த செங்கல்லை எடுத்து நமச்சிவாயராஜை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த லாரி டிரைவர் சத்தம் போட்டு உள்ளார். இதனால் சந்திரபோஸ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நமச்சிவாயராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நமச்சிவாயராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்தனர். இறந்த நமச்சிவாயராஜிக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்