போலி வங்கி கணக்கு தொடங்கி ரூ.12½ லட்சம் கையாடல் செய்த கிராம பஞ்சாயத்து தலைவர் கைது

பெங்களூரு அருகே பி.டி.ஓ. பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி ரூ.12½ லட்சத்தை கையாடல் செய்த கிராம பஞ்சாயத்து தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-09-07 19:58 GMT
பெங்களூரு,

பெங்களூரு புறநகர் பாகலூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் முனேகவுடா (வயது 57). அதே கிராம பஞ்சாயத்தில் பி.டி.ஓ.வாக அன்னபூர்னேஷ்வரி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாகலூர் கிராம பஞ்சாயத்தில் தனியார் செல்போன் நிறுவனம் கேபிள் வயர்கள் பதிக்க ஒப்பந்ததாரர் ஆனந்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒப்பந்த தொகை ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தவும் பி.டி.ஓ. அன்னபூர்னேஷவரி, ஆனந்திடம் தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூ.12.60 லட்சத்திற்கான காசோலையை கிராம பஞ்சாயத்து தலைவர் முனேகவுடாவிடம் ஆனந்த் கொடுத்திருந்தார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் கேபிள் வயர்களை பதிக்கும் பணிகளை தொடங்கினார். ஆனால் ஒப்பந்த தொகை வழங்காமல் பணியை தொடங்குவதற்கு அதிகாரி அன்னபூர்னேஷ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ரூ.12.60 லட்சத்திற்கான காசோலையை பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்து விட்டதாக ஆனந்த் கூறினார்.

ரூ.12.60 லட்சம் கையாடல்

உடனே முனேகவுடாவிடம் இதுபற்றி அன்னபூர்னேஷ்வரி கேட்டார். அப்போது அவர், ரூ.12.60 லட்சத்திற்கான காசோலையை பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் வைத்து விட்டு சென்றதாகவும், அதன்பிறகு காசோலையை பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறினார். அதுபற்றி அன்னபூர்னேஷ்வரி சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்ததில், ஆனந்த் வழங்கிய ரூ.12.60 லட்சம் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அன்னபூர்னேஷ்வரி நடந்த சம்பவங்கள் குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், ஒப்பந்ததாரர் ஆனந்த் வழங்கிய ரூ.12.60 லட்சத்தை முனேகவுடா தான் கையாடல் செய்தது தெரியவந்தது.

கைது

அதாவது அதிகாரி அன்னபூர்னேஷ்வரி பெயரில் போலி வங்கி கணக்கை தொடங்கியதுடன், ஆனந்த் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்து, போலி வங்கி கணக்குக்கு ரூ.12.60 லட்சத்தை முனேகவுடா மாற்றியுள்ளார். பின்னர் அந்த பணத்தை எடுத்து அவர் செலவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் முனேகவுடாவை பாகலூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்