நடிகை கங்கனா ரணாவத் கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம்

நடிகை கங்கனா ரணாவத் மும்பை போலீசார் குறித்து கூறிய கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-09-08 19:31 GMT
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக மும்பை நகரையும், மும்பை போலீசாரையும் அவமதிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார். இதற்கு ஆளுங்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினையில் பா.ஜனதாவை தொடர்புபடுத்தியும் பேசினர்.

இந்தநிலையில் நேற்று சட்டசபையில் நடிகை கங்கனாவின் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் கண்டனம் தெரிவித்தார். அவர் நடிகையின் கருத்து மும்பை போலீசாரை அவமதித்து உள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்ததால், மும்பை போலீசாரின் திறன் எனக்கு தெரியும். ஆனால் போலீசாருக்கு அரசியல் அழுத்தங்கள் வரலாம்’’ என்றார்.

குற்றச்சாட்டு

இதேபோல அவர் மாநில அரசு கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘‘முதல்- மந்திரி மும்பையில் கொரோனா பரவலை தடுக்க ஆய்வு செய்கிறார். துணை முதல்-மந்திரி அஜித் பவார் புனேயில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அவுரங்காபாத்தும், நாக்பூரும் மராட்டியத்தில் இல்லையா?. அங்கு சூழலை நீங்கள் ஆய்வு செய்தீர்களா, அங்குள்ள நிலவரத்தை உணர்ந்தீர்களா?.

இந்த அரசு கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவே விரும்புகிறது. அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்தவில்லை. கொரோனா பரவலை தடுக்க நாங்கள் அரசுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்