நெல்லையில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 135 பஸ்கள் இயக்கம்

நெல்லையில் 2-வது நாளாக நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கூடுதலாக 135 பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-09-08 23:41 GMT
நெல்லை,

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் 60 சதவீத பஸ்கள் நேற்று முன்தினம் அனைத்து பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டன.

பஸ்நிலையங்களில் இருந்து பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். டிரைவர், கண்டக்டர்களும் முககவசம், கையுறை அணிந்து இருந்தனர். நேற்று முன்தினம் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் கூட்டம்

நேற்று 2-வது நாளாக பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் பஸ்கள் எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஆம்னி பஸ் நிறுத்தத்திலும் பஸ்கால அட்டவணை வைக்கப்பட்டு இருந்தது. இந்த 2 இடங்களில் இருந்தும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லையில் இருந்து தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, திருப்பூர், நாகர்கோவில் சென்ற பஸ்களில் பயணிகள் அதிகளவில் சென்றனர்.

நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு 540 பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 135 பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் நெல்லையில் இருந்து 12 அரசு விரைவு பஸ்கள் சென்னைக்கும், கோவைக்கு ஒரு பஸ்சும், ஓசூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்பட்டன.

இயல்பு வாழ்க்கை

தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து பலர் நெல்லைக்கு வேலைக்கு வந்ததால் பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நகர பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆட்டோ, கார்களும் வழக்கம்போல் ஓடின. பஸ், கார், ஆட்டோக்கள் ஓடியதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 4-வது பிளாட்பாரத்தில் இருந்தும், ஆம்னி பஸ் நிறுத்தத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சியில் இருந்து திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவில் செல்கின்ற இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டு நெல்லை வந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்