அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய விசாரணை கைதி சிக்கினார் வல்லநாட்டில் போலீசார் சுற்றி வளைத்தனர்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய விசாரணை கைதி சிக்கினார். அவரை வல்லநாட்டில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

Update: 2020-09-09 23:19 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்கள் 2 பேரும் கோட்டை கருங்குளம் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தனர்.

கணவன்-மனைவி சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நகைக்காக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முருகன் மீது நகை பறிப்பு, கொலை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் கணவன்-மனைவி 2 பேரும் தலைமறைவானார்கள்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கணவன்-மனைவி கைது

இதையடுத்து தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி, விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் பதுங்கி இருந்த முருகன், அவருடைய மனைவி பேச்சியம்மாள் ஆகியோரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

முருகன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், பேச்சியம்மாள் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை கைதியாக முருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முருகன் கடந்த 5-ந் தேதியன்று நெஞ்சுவலி காரணமாக நெல்லை அரசு மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை கண்காணிக்க 2 சிறைக்காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

தப்பி ஓட்டம்

நேற்று காலை இயற்கை உபாதைக்கு செல்வது போல் வெளியே வந்த முருகன் நைசாக யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியே தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சிறைக்காவல்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் முருகன் மாயமாகி விட்டார்.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய கைதி முருகனை வலைவீசி தேடி வந்தனர்.

சிக்கினார்

இந்த நிலையில் மாலையில் நெல்லையை அடுத்த வல்லநாடு பகுதியில் முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் சிறைக்காவலர்கள் உடனடியாக விரைந்து சென்றனர். அங்கு ஓரிடத்தில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடி, மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்