கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழையால் கரைபுரண்ட காட்டாற்று வெள்ளம் பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்பு

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

Update: 2020-09-10 00:29 GMT
டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அருகே மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, கோவிலூர், அருகியம் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு செல்ல கடம்பூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும். இதில் குரும்பூர் முதல் மாக்கம்பாளையம் வரை உள்ள சாலை கரடு முரடாக உள்ளது. செல்லும் வழியில் சக்கரை பள்ளம், குரும்பூர் பள்ளம் ஆகிய 2 காட்டாறுகள் குறுக்கே ஓடுகிறது. இங்கு மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மழை வெள்ளம் வடியும் வரை போக்குவரத்து துண்டிக்கப்படும். இது தான் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் சென்றது. பின்னர் அங்கிருந்து கடம்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டு சென்றது.

காட்டாற்று வெள்ளம்

மதியம் 2 மணி அளவில் குரும்பூர் பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது வனப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் காட்டாற்று வெள்ளத்தை பஸ் கடந்து செல்ல முடியவில்லை. காட்டாற்றின் மறுகரையிலேயே பஸ் நின்றது. அந்த பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மோட்டார்சைக்கிளில் சென்றவர்களும், காட்டாற்றை கடக்க முடியாமல் பரிதவித்தனர். இரவு 7 மணிஅளவில் வெள்ளம் குறைந்த பின்னரே பஸ் காட்டாற்றை கடந்து சத்தியமங்கலம் சென்றடைந்தது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘பல ஆண்டு காலமாக மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம், ஆகிய 2 காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை பாலம் கட்டப்படவில்லை. எனவே விரைந்து உயர்மட்ட பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்