கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டார், நடிகர் சேத்தன்

கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு இந்தி தெரியாது, நாங்கள் கன்னடர்கள் என்று வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை நடிகர் சேத்தன் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-09-10 20:33 GMT
பெங்களூரு,

தமிழ்நாட்டில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த டி-சர்ட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டார். அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அவரை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், இளைஞர்கள், அந்த வாசகத்துடன் டி-சர்ட் அணிந்து தங்களின் புகைப்படத்தை வெளியிட்டு மொழி உணர்வை வெளிப்படுத்தினர்.

அதற்கு பதிலடியாக பா.ஜனதாவினர், எனக்கு இந்தி தெரியும் போடா என்ற வாசகத்துடன் டி-சர்ட் அணிந்து அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இருதரப்புக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம் தொடங்கியுள்ளது.

இந்தி திணிப்பு

கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் டி-சர்ட் அணிந்து ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எங்களுக்கு இந்தி தெரியாது, “நாங்கள் கன்னடர்கள், நாங்கள் திராவிடர்கள்“ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அவருடன் பல்வேறு இளைஞர்களும் அந்த டி-சர்ட்டை அணிந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சேத்தன் கூறியதாவது:-

நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டுக்க பிறகு இந்தி திணிப்பு அதிகரித்துவிட்டது. நமது வரிப்பணத்தில் இந்தி மொழி தின விழாவை கொண்டாடுகிறார்கள். இதை ஏற்க முடியாது. இந்தி மொழி திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். நாம் நமது மொழியை பாதுகாக்க வேண்டும்.

திராவிட நாடு

அதற்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். கர்நாடகத்தில் பிறந்த பெரியார், தமிழ்நாட்டில் போராடி, திராவிட நாடு கனவு கண்டார். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். இல்லாவிட்டால் நமது மொழி, கலாசாரம் அழிந்துவிடும்.

இவ்வாறு நடிகர் சேத்தன் கூறினார்.

மேலும் செய்திகள்