போலி கால்சென்டர் மூலம் வெளிநாட்டுக்காரர்களை மிரட்டி பணமோசடி 6 பேர் கைது

போலி கால்சென்டர் மூலம் வெளிநாட்டுக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-13 20:47 GMT
மும்பை,

மும்பையில் போலி கால்சென்டர் நடத்தி வெளிநாட்டவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் கடந்த மாதம் 29-ந்தேதி மலாடு ஜும்மா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் மற்றும் மார்வே ரோட்டில் உள்ள செஜ் பிளாசா ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு 5 போலி கால் சென்டர்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலி கால் சென்டர்களை நடத்தி 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் பைசான் பாலிம் (வயது23), ஜிசான் அன்சாரி(21), கணேஷ்சிங் ராஜ்புத்(27), முகமது சாபாஷ், நித்தின் ரானே(42), சையத்(29) என்பது தெரியவந்தது.

மருந்துகள் விற்பனை

இவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக்காரர்களிடம் தங்களை அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் என்றும், குடியுரிமை அதிகாரிகள் என கூறியும் வரி செலுத்தாமல் இருப்பதாக மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்து உள்ளனர். மேலும் இந்த பணியில் 81 ஆண்கள் மற்றும் 26 பெண்களை அவர்கள் வேலைக்கு அமர்த்தி பணப்பறிப்பு வேலைகளில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தவிர அவர்கள் வலி நிவாரண மாத்திரைகள், செக்ஸ் ஊக்க மருந்துகள் போன்றவற்றை வெளிநாட்டில் இருந்து பெற்று மும்பையில் சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் வேலை பார்த்து வந்த 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்