குஷ்டகி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

குஷ்டகி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரேகவுடா பட்டீல் பையாப்புராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2020-09-13 22:08 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஏழைகள், பணக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சிலர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வை கொரோனா தாக்கி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் அமரேகவுடா பட்டீல் பையாப்புரா. இவர் தனது தொகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சொந்த வேலையாக அமரேகவுடா பட்டீல் பையாப்புரா எம்.எல்.ஏ. பெங்களூருவுக்கு சென்று இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல், சளி தொல்லையும் இருந்தது. அவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமரேகவுடா பட்டீல் பையாப்புரா எம்.எல்.ஏ. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும், அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும் சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்