தென்பெண்ணை ஆற்றங்கரையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு - கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Update: 2020-09-13 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள எண்ணேகொள்புதூரில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் 3 சாமி சிலைகள் இருந்தன. இதையறிந்த வரலாற்று பேராசிரியர் விஸ்வபாரதி மற்றும் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் ஏகநாதன் ஆகியோர் விரைந்து சென்று 3 சிலைகளையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், செல்வகுமார் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் அங்கு சென்று 3 சிலைகளையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ், குழு தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-

இந்த சிலைகள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய சுமார் 3 அடி உயரமுள்ள பெருமாள் சிலைகள் ஆகும். இவை சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த காலத்தில் சிதிலமடைந்த கோவிலை புதுப்பிக்கும் போது பழைய சிலைகளை ஆற்றில் உள்ள தண்ணீரில் விடுவது வழக்கம். அதே போல் இப்பகுதியில் உள்ள ஏதேனும் பழமையான பெருமாள் கோவிலை புதுப்பிக்கும்போது சேதமடைந்த சிலைகளை ஆற்றில் போட்டிருக்கலாம்.

இந்த இடத்தின் அருகே உள்ள பெல்லம்பள்ளியில், 779 ஆண்டுகளுக்கு முந்தைய சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒய்சாள பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மன் மகன் வீர சோமேசுவரன் (1235-1254) காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் சிலை கிடைத்த இடத்தின் அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்வ பிருந்தாவனம் இடிந்த நிலையில் இருப்பதை கொண்டு இவ்விடத்தின் அருகே இருந்த பெருமாள் கோவில் சிலைகளாகவே இவை இருக்க வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அவர்கள் 3 சிலைகளையும் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்