ஏகாதசியையொட்டி கள்ளழகர் கோவிலில் நெய் விளக்கேற்றி பக்தர்கள் தரிசனம்

ஏகாதசியையொட்டி கள்ளழகர் கோவிலில் நெய் விளக்கேற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-14 05:15 GMT
அழகர்கோவில்,

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று ஏகாதசி தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி பூமிதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இங்குள்ள கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் சன்னதிகளிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நுழைவுவாயிலில் கிருமி நாசினி மருந்து தெளித்து கைகளை சுத்தம் செய்த பின்னே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இக்கோவிலின் பிரதான காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலைகளையும் சந்தனத்தையும் காணிக்கையாக செலுத்தினர்.

அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது. இங்கும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.

கோவில் நிர்வாகத்தினரும், போலீசாரும் கோவிலுக்கு வந்த பக்தர்களை அரசின் விதிமுறைக்கு உட்பட்டு வரிசையாக தரிசனம் செய்ய அனுப்பினர்.

மேலும் செய்திகள்