போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை கண்டறிய நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் தலை முடி, ரத்த மாதிரி ஐதராபாத்திற்கு அனுப்பி வைப்பு ஒரு வாரத்தில் அறிக்கை கிடைக்க வாய்ப்பு

போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை கண்டறிய, நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் தலை முடி, ரத்த மாதிரி ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை ஒரு வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Update: 2020-09-14 22:14 GMT
பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தவில்லை என்று 2 நடிகைகளும் கூறி வருகின்றனர்.

இதையடுத்து, நடிகைகள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பதை கண்டறிய, அவர்களுக்கு மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது நடிகை ராகிணி திவேதி சிறுநீருடன் தண்ணீர் கலந்து கொடுத்திருந்த சம்பவம் நடந்திருந்தது. மேலும் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நடிகைகளும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பதை கண்டறிவதற்காக, அவர்களது தலை முடி, ரத்த மாதிரி, சிறுநீரை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு நடத்துவதற்கு பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் போதிய வசதிகள் இல்லாத காணத்தால், ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில் அதன் அறிக்கை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆய்வறிக்கை கிடைத்ததும், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருட்களை பயன்படுத்தினார்களா? இல்லையா? என்பது உறுதியாக தெரிந்து விடும். அந்த அறிக்கை வழக்கின் முக்கிய ஆதாரமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறிக்கையை பெற மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்