திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2020-09-15 00:37 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி முதலியார் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் இன்று (நேற்று) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு 28-ந்தேதி அன்று மாத்திரை வழங்கப்படும். 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் ரத்தசோகை தடுக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பட்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த உதவும். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரையும் வழங்கப்படும்.

1,260 இடங்களில்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 1,260 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமார் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்