நோயாளிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்: ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-15 02:03 GMT
ஓசூர்,

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான உள், புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓசூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களிடம் குழந்தை பிறந்ததும் சில நர்சுகள், ஊழியர்கள் பணம் கேட்பதாகவும், குழந்தையை பறித்துக்கொண்டு மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கவனத்திற்கும் சென்றது.

இதையடுத்து, நேற்று மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசுலு, செயலாளர் முருகன், ஓசூர் கிழக்கு மண்டல தலைவர் பிரவீண்குமார் மற்றும் பா.ஜனதா கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நோயாளிகளிடம் பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வாக்குவாதம்

பின்னர் தலைமை மருத்துவ அலுவலர் பூபதியிடம், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரிடம் புகார் தொடர்பாக மனு கொடுத்தனர். அப்போது சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தாக்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ அலுவலர் பூபதி தெரிவித்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்