மின்கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்

மின்கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-15 23:27 GMT
புதுச்சேரி,

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி பல மாதங்களாக மின் கணக்கீடு நடைபெறவில்லை. இருப்பினும் மின் நுகர்வோர் குறிப்பிட்ட அளவு தொகையை கட்டணமாக செலுத்தி வந்தனர். இந்தநிலையில் தற்போது மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆனால் அதிக அளவில் கட்டணம் விதித்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் நாள்தோறும் மின்துறை அலுவலகங்களுக்கு சென்று விளக்கம் கேட்டு வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் பதில் அளிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக கட்டணம் தொடர்பாக மின்துறை அலுவலகத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர். வழக்கம்போல் அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே காந்தி வீதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். அவர் மின்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து மின்துறை பொறியாளர் கனியமுதன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

மின்துறை கணக்கீடு தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) மின்துறை சார்பில் முகாம் அமைத்து தீர்வு காணவேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அதை மின்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்