நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-16 02:04 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை நடைபெறாமல் தடுக்க நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை, தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவையும் போலீசார் அடைத்தனர். கதவு முன்பு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தள்ளு முள்ளு

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஏசுராஜா முன்னிலையில் நிர்வாகிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்கள் சூலாயுதத்தில் தூக்குகயிறு, மருத்துவ கருவிகளை தொங்கவிட்டு கையில் ஏந்தியபடி வந்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி அவர்கள் வேகமாக ஓடினர்.

கயிறை குறுக்கே போட்டு மாணவர்களை தடுக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் ஓடினர். கதவு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை தள்ளி விட்ட மாணவர்கள் கதவை தள்ளிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர், கதவு மீது ஏறி உள்ளே குதிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் பிடித்து கீழே இழுத்தனர்.

30 பேர் கைது

இதனால் மாணவர்கள் அனைவரும் தரையில் படுத்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். உடனே அவர்களை போலீசார், குண்டுக்கட்டாக தூக்கி இழுத்து சென்று வேனில் ஏற்றினர். தள்ளு முள்ளு ஏற்பட்டபோது மாணவர் ஒருவரின் பனியன் கிழிந்தது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்